இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்திய மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
அதுபோல இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இங்கிலாந்து வீரர்களின் தினசரி செலவுகளுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் நாள்தோறும் ரூ 4,200 வழங்க வேண்டும்.
இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வந்து சுமார் 20 நாட்கள் ஆகி விட்டன. ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய செலவு தொகை சரியான முறையில் அவர்கள் கையில் கிடைக்கவில்லை. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அவர்களுக்கு வழங்க தினசரி வழங்க வேண்டிய செல்லக்கூடிய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அன்றாட செலவுகளுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ 58 லட்சம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்தது. இதனை தொடர்ந்து ரத்து செய்யப்படும் நிலையில் இருந்த டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் இங்கிலாந்து வீரர்களுக்கு தினசரி வழங்க வேண்டிய செலவு தொகை சேர்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.