“வாழ்க்கையில நாம என்னவேணாலும் ப்ளான் பண்ணலாம், ஆனா அத விட பயங்கரமா எதாவது நடக்கும்” போன வாரம் பார்த்த படத்தோட டயலாக், இந்த வாரமும் உங்களுக்கு ஃபீல்லாகுதுன்னா, நீங்க கடவுள் இருக்கான் குமாரு படத்தில் இருக்கீங்கனு அர்த்தம்.
ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், நிக்கி கல்ராணிக்கும் நிச்சயதார்த்தம். இரண்டு நாட்களில் திருமணம். அதற்கு நடுவே பேச்சிலர் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி செல்கிறார்கள் ஜி.வியும், ஆர்.ஜே.பாலாஜியும். பார்ட்டியை முடித்துவிட்டு, திரும்பும் போது, எல்லை தாண்டும் பியர் பாட்டில்களால் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்ராஜிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அடுத்த நாள் திருமணம் என தெரிந்துக் கொண்டு ஜிவியை பணம் கேட்டு மிரட்டுகிறார் பிரகாஷ்ராஜ். அவரிடமிருந்து குமாரும் நண்பனும் எப்படி தப்பிகிறார்கள் என்பதே கதை. இதற்கு நடுவே பழைய காதலி ஆனந்தியுடன் ஃப்ளாஷ்பேக் போனஸ். .
ஜி.வி.யின் முதல் யு சான்றிதழ் படம், மதுகுடிக்கும் காட்சிகளும், சந்தானமும் இல்லாமல் வந்திருக்கும் இயக்குநர் ராஜேஷின் முதல் திரைப்படம் என இந்தப் படத்தைப் பார்க்க வரலாற்று சிறப்புமிக்க காரணங்க நிறையவே இருக்கின்றன. பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வருவதற்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை, தன் காமெடி டச்சோடு திரைக்கதையாக்கி எடுத்திருக்கிறார் ராஜேஷ். அந்த டச் சில சமயங்களில் ஆஹாவையும், பல சமயங்களில் ஆவ்வ்வ்வ்வையும் தருவது ட்விஸ்ட்.
சொல்வதெல்லாம் உண்மையை கலாய்த்து “பேசுவதெல்லாம் உண்மை”, பி.எஸ்.என்.எல் விளம்பரம்,ஜியோ சிம், விமான நிலையத்தில் கண்ணாடி விழுவது என்று நடப்பு சம்பவங்களை ஸ்கிரிப்டில் டைமிங்காக கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். “சுப்ரீம் கோர்ட் சொன்னா, ஸ்டேட்டே கேக்காது, மதுரையில இருந்து பசங்கள இறக்கலாம்னு பார்த்தா, ரஜினிமுருகன் பார்ட் 2 பிரச்னையில் பிஸியா இருக்காங்க, போலீஸ்ட்ட போகலாம்னா, வாய்ல ஒயர வச்சி சொருவிடுவாங்க” என்று லேட்டஸ்ட் பிரச்னைகளை காமெடியில் சொல்லியவிதத்தில் செம ராஜேஷ். மேட்னி ஷோ பார்ப்பவர்களுக்கு 2000 நோட்டு அதிர்ச்சியையும் சேர்த்திடுவார்களோ என நினைக்க வைப்பது அட்டகாசம்.
பல இடங்களில் சிரித்தாலும், படம் பார்க்கிறோமோ அல்லது தொலைக்காட்சி ஸ்பூஃப் நிகழ்ச்சி பார்க்கிறோமே என்ற சந்தேகம் எழுகிறது எஸ்.எம்.எஸ், பாஸ் (எ) பாஸ்கரன், ஒகே ஓகேன்னு என உங்க படங்களைப் பார்த்து இன்னும் எவ்வளோ மீம்ஸ் வந்திட்டிருக்கு? ஆனா, இன்னும் கெஸ்ட் ரோலுக்கு ஜீவாவையே அழைத்துக் கொண்டிருந்தால் எப்படி ப்ரோ?
வெர்ஜின் பையன்ற இமேஜ் ஓக்கேதான். அதற்காக அதையே எல்லா படங்களிலுமா????ஜி.வி.பிரகாஷ் வழக்கமாக எவ்வளவு நடிப்பாரோ அவ்வளவே நடித்திருக்கிறார். அதைத் தாண்டி ஒரு ஸ்டெப் கூட வெளியே வரவில்லை. இவரின் நடிப்பை ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி கவுண்டர்கள் நியூட்ரல் செய்கின்றன. பட தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஆர்.ஜே. பாலாஜியின் கிராஸ் டாக், செம ஷார்ப்.
நிக்கி கல்ராணி, ஆனந்தி என இருவர் இருந்தாலும் ஹீரோயினுக்கு ஸ்கோப் உள்ள படம் இல்லை என்பதால், வந்து போகிறார்கள். இதிலும் ஆனந்தி மட்டும் ஸ்கோர் செய்கிறார். ஹீரோயினைத் தாண்டி நம்மைக் கவர்வதும், நடித்திருப்பதும் பிரகாஷ்ராஜ் மட்டும் தான். வில்லத்தனமாக ஜி.வியை மிரட்டுவதும், க்ளைமாக்ஸுக்கு முன் வந்து கதறுவதுமாக, செல்லம் வீ மிஸ் யூ!
ஈசிஆர் ரோட்டில் வேகமாக படம் போய்கொண்டிருக்கும் போது, செக்போஸ்டில் சிக்கிய வண்டி போல திடீர் பகீர் பாடல்கள் தான், டயர்ட் ஆக்கி நம்மை தூங்கவைத்துவிடுகின்றன. அந்த பேயோட டான்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓவர்.ட்ரெண்டு என்பதால் பேய் எபிஸோட் என்றால், சோ சாரி ப்ரோ. நடிப்பு மட்டுமில்லாமல், படத்திற்கும் இசையும் ஜி.வி. தான், நடிப்பில் வைத்த அதீத கவனத்தினால், பாடல்களில் பெஸ்ட் கொடுக்க தவறிவிடுவது தொடர்கிறது ஜி.வி. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை சக்தி சரவணனும், அதைக் கச்சிதமாக திரையில் அழகுபடுத்திய விதத்தில் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கும் க்ளாப்ஸ்.
காமெடிக்காக, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் என்று அவர்களுக்கான நடிப்பை, அவர்களின் பாணியிலேயே பக்காவாக டெலிவரி செய்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலை விட, பிரகாஷ்ராஜுடன் அந்த ஃப்ரெஞ்ச் பொண்ணு போடும் குத்தாட்டம் செம...