சென்னை: நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தபோது நடிகர் கருணாஸின் கார் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அழைப்பிதழ் இல்லாமல் வந்த முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தியதுடன் 20 பேரை கைதும் செய்தனர். இதற்கிடையே சங்க மைதானத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கைது கருணாஸின் கார் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரின் பெயர் பிரபு, ராமநாதபுரத்தை சேர்ந்தவர். நடிகர் ஜே.கே. ரித்திஷின் ஆதரவாளர்.

வழக்குப்பதிவு கருணாஸின் ஆதரவாளர்கள் தாக்கியதில் காயம் அடைந்த பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தான் தாக்கப்பட்டது குறித்து பிரபு அளித்த புகாரின்பேரில் கருணாஸின் வழக்கறிஞர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜே.கே. ரித்திஷ் சட்டசபை தேர்தலின்போது திருவாடானையில் கருணாஸுக்காக ரித்திஷ் பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு இருவரும் எதிரெதிர் துருவமாக மாறி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.