NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

நடிகராவதற்கு முன்பு சூர்யா பட்ட கஷ்டங்கள்: சிவகுமார் பேச்சு

நடிகராவதற்கு முன்பு சூர்யா அதிகமாக கஷ்டப்பட்டதாக நடிகர் சிவகுமார் பட விழாவில் கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.



அசோக் செல்வன்-பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ள படம், ‘கூட்டத்தில் ஒருத்தன்.’ டி.ஜே.ஞானவேல் டைரக்டு செய்துள்ளார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, ரமணியம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-


“வாழ்க்கையில் முன்னேறிய பல புதியவர்களை இங்கு பார்க்கிறேன். அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறார்கள். சூர்யா நடிகராவதற்கு முன்பு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். அந்த நிறுவனத்தினரிடம் நான் நடிகர் சிவகுமார் மகன் என்று சொல்லவில்லை. எனது பெயரை பயன்படுத்தாமலேயே பல மாதங்கள் அங்கு வேலை செய்து இருக்கிறார்.

அம்பத்தூரில் உள்ள கம்பெனியில் இருந்து சோழிங்கநல்லூர் வரை மோட்டார் சைக்கிளிலேயே பொருட்களை ஏற்றி சென்று இருக்கிறார். சில நேரங்களில் அந்த கம்பெனியில் தரையை கூட சுத்தம் செய்து இருக்கிறார். அப்படி கஷ்டப்பட்டு பின்னர் நடிகரானார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களும் ஏற்றுமதி தொடர்பான வேலைகள் பார்த்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்துள்ளனர்.

டைரக்டர் மணிரத்னத்திடம், நீங்கள் பேசக்கூடாது உங்கள் படங்கள்தான் பேச வேண்டும் என்று நான் சொல்வது உண்டு. சிறந்த டைரக்டர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். படங்களை பேச வைக்க வேண்டும். தெளிவான படங்களை எடுக்க வேண்டும்.


நான் இந்த வயதிலும் ஆரோக்கியத்தோடு இருப்பது எப்படி? என்று பலர் கேட்கிறார்கள். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுகிறேன். 5 மணிவரை யோகா செய்கிறேன். தொடர்ந்து 6.30 மணிவரை நடைபயிற்சி செய்கிறேன். ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சிகள் அவசியம். இந்த படத்தின் டைரக்டர் ஞானவேல் திறமையானவர். அகரம் பவுண்டேஷனை சிறப்பாக நிர்வகித்து வருகிறார். ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் வெற்றி பெறும்.

இவ்வாறு சிவகுமார் பேசினார்.

நடிகர் சூர்யா பேசும்போது, “அகரம் பவுண்டேஷன் மூலம் 1,500 பேரை படிக்க வைத்து எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்து கொடுத்து இருக்கிறோம். அவர்களுக்கு ரூ.60 கோடி செலவு ஆகியிருக்கும். ஆனால் இந்த படத்தின் டைரக்டர் பலரிடம் பேசி அதை ரூ.10 கோடியாக குறைக்கவைத்தார். மேலும் 3 ஆயிரம் பேர் அகரம் மூலம் கல்வி உதவி பெற்று வருகிறார்கள்” என்றார்.

விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், டைரக்டர்கள் தரணி, ராதாமோகன், ராஜுமுருகன், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா, தயாரிப்பாளர் பிரகாஷ்பாபு, உள்பட பலர் கலந்துகொண்டனர்.